சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தெருவெல்லாம் கொண்டாடியது போய் இப்போது பள்ளிகளுக்குள்ளும் அரசு அலுவலகங்களுக்குள்ளும் நடைபெறும் ஒரு சம்பிரதாய விழாவாக மாறிவிட்டது.
"இந்திய நாட்டின் தந்தை' என்று போற்றப்ப
டும் காந்தியே சுதந்திர தினத்தைக் கொண்டாடவில்லை, நாம் ஏன் கொண்டாட வேண்டும்?' என்று சிலர் கேட்கிறார்கள்.
சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது நம்முடைய தன்மான உணர்வு, சுயகெüரவம், பெருமை என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளவில்லை. உணர மறுக்கிறோம்.
சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் வடிவமைத்து, மக்களைத் திரட்டி சுதந்திரம் என்ற உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றாரே காந்தியடிகள், அவர் அந்த முதல் சுதந்திர தின விழாவின்போது என்ன செய்து கொண்டிருந்தார், எங்கிருந்தார் என்பதைப் பற்றிய சில வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
வரலாற்றுப் பின்னணி: 1946-லேயே வங்காளம் கலவர பூமியாக மாறிவிட்டிருந்தது. அதற்கான சரித்திரப் பின்னணி தெரிந்தால்தான் இந்து - முஸ்லிம் உறவு, பாகிஸ்தான் பிரிவினை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.
1946-ல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டிஷ் அரசு, அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. அது "அமைச்சர்களின் தூதுக்குழு' என்றழைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லியின் முயற்சியின் பலனாக இக்குழு உருவானது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் ஒப்படைக்கும் வழிமுறைகளையும், சுதந்திர இந்தியா எத்தகைய ஆட்சிமுறையைப் பின்பற்ற வேண்டுமென்று முடிவு செய்யவும் இக்குழுவை அமைப்பதாக அட்லி கூறினார்.
முக்கிய இந்தியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் லீக் மற்றும் அனைத்து இந்தியப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இக்குழு இந்தியா வந்தது.
இதில் இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலர் பெத்திக் லாரன்ஸ் பிரபு, வர்த்தக வாரியத்தின் தலைவர் சர் ஸ்டாஃபர்ட் கிரிப்ஸ், கடற்படை முதன்மைத் தளபதி ஏ.வி. அலெக்ஸôண்டர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தூதுக்குழு உறுப்பினர்கள் இருவகைத் திட்டங்களை 1946 மே, ஜூன் மாதங்களில் முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஒரு மத்திய அரசு உருவானது.
இரண்டாவது திட்டத்தில் பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தபடி பாகிஸ்தான் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை விரைவுபடுத்திச் செயல்படுத்த முஸ்லிம் லீக் திட்டமிட்டது.
அதன்படி முஸ்லிம் லீகின் தலைவரான முகமது அலி ஜின்னா ஆகஸ்ட் 16, 1946-ஆம் நாளை "டைரக்ட் ஆக்ஷன் டே' (நேரடி நடவடிக்கை தினம்) என்று அறிவித்து விட்டார்.
அப்போது வங்காளத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் முதல்வர்தான் சாஹித் சுரவர்த்தி.
வெறுப்பு, நெருப்பாய் பற்றியது: வங்காளத்திலும் அதனைத் தொடர்ந்து பிகாரிலும் கலவரம் வெடித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் மிருகத்தனமாக வேட்டையாடிக் கொன்று குவித்தனர்.
சராசரி இந்தியர்களின் மனதே பதறியபோது, அகிம்சையும் அன்புமே வாழ்வின் ஆதாரமாக வேண்டும் என்று கூறிய காந்தியடிகளின் மனது பதறாதா?
தன்னுடைய வாழ்வின் கடைசி சோதனைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் காந்தியடிகள். கூட்டமாய் அல்ல, தன்னந்தனி மனிதராய் தன்னுடைய உதவியாளர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றார் - வங்காளத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அல்ல, தைரியத்தைக் கொடுப்பதற்காக.
126 நாள்கள் (அக்டோபர் 29, 1946 முதல் மார்ச் 3, 1947 வரை) எந்த இந்தியத் தலைவரும் சென்றுவராத இடங்களுக்கெல்லாம் இரவு பகலாய், காலில் செருப்பின்றி நடந்தே சென்றார்.
அவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அரசாங்கம் அஞ்சியது. ஆனால் ""என்னுடைய உயிர் ஆண்டவன் கையில்தான் உள்ளது'' என்று கூறிவிட்டார் காந்தியடிகள்.
இந்த நவகாளி யாத்திரைக்குப் பின்னர்தான் அமைதி திரும்பியது.
கலவரத்தைக் கட்டுக்குள் வைத்து அரசாங்கத்தைத் தனிநாடு கோரிக்கைக்கு இணங்க வைத்துவிடலாம் என்று எண்ணிய அரசியல்வாதிகளின் கணக்கு தப்பாகிவிட்டது. அன்றைய முதல்வராக இருந்த சுரவர்த்தியே அதற்கு சாட்சி.
இந்தப் பின்னணியில்தான் கசப்பான இந்தியப் பிரிவினை நடக்கிறது. ஏற்கெனவே ரணமாகிப் போயிருந்த வங்காளத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. கல்கத்தா நகரம் தீப்பிடித்து எரிகிறது. 1946-ல் முதல்வராய் இருந்து கலவரத்துக்குத் துணைபோன சாஹித் சுரவர்த்தி தற்போது செய்வதறியாது காந்தியடிகளின் துணையை நாடி நின்றார்.
காந்தியடிகளின் அகிம்சைக்கு ஒரு சவால்: 9 ஆகஸ்ட், 1947 முதல் 7 செப்டம்பர், 1947 வரை 30 நாள்கள் கல்கத்தாவில் தங்கி அமைதிப்பணி ஆற்றினார் காந்தியடிகள். பாலியாகட்டாவில் உள்ள ஹைதரி மன்ஸில் என்னும் (முஸ்லிம்) வீட்டில் தங்கியிருந்தார். சுரவர்த்தியும் உடனிருந்தார்.
ஆகஸ்ட் 14 படுக்கைக்குப் போவதற்கு இரவு 11 மணி ஆகிவிடுகிறது. கலக்கத்தோடு காணப்பட்டார். விடியற்காலை வழக்கத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே காலை 2 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார்.
ஆகஸ்ட் 15, காந்தியடிகளின் நிழலாக இருந்து மகனாய் மலர்ந்த மகாதேவ் தேசாயின் நினைவு நாள். ஆகவே, அன்று உண்ணாவிரதமும் நூற்பும் செய்வது வழக்கம். அன்றும் அதையே செய்ய முடிவு செய்தார்.
சில முஸ்லிம்கள் இந்தச் சுதந்திரம் வரக் காரணமாக இருந்த காந்தியடிகளைப் பார்த்த பின்புதான் தங்களுடைய நோன்பை முடிப்போம் என்று காத்திருந்தார்கள். அதில் இந்துக்களும் இருந்தார்கள்.
அவர்கள் காந்தியடிகளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போதே சாந்திநிகேதன் குழந்தைகள் தங்களுடைய இனிமையான குரலால் கவி தாகூரின் சுதந்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தார்கள்.
பிரார்த்தனைக்கு இடையூறு இல்லாமல் தங்களுடைய பாடலை நிறுத்திக்கொண்டு பிரார்த்தனை முடிந்தவுடன் தொடர்ந்து பாடினார்கள்.
அமைச்சர்களுக்கு ஆலோசனை: காலையில் மேற்கு வங்க அமைச்சர்கள் காந்தியிடம் ஆசி வாங்க வந்தார்கள். அவர்களிடம், ""இன்றிலிருந்து நீங்கள் முள் கிரீடத்தை அணிந்துகொள்ளப் போகிறீர்கள். உண்மையையும் அகிம்சையையும் வளர்த்தெடுக்க சளைக்காமல் பாடுபடுங்கள். பொறுமையோடும் பணிவோடும் இருங்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி உங்களுக்குக் கொடுத்த சோதனைகள் உங்களுக்கு மன உறுதியையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனிமேல்தான் அதனை மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்கப் போகிறார்கள். அதிகாரத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அதிகாரம் உங்களின் நேர்மையைச் சிதைத்துவிடும். அதனுடைய பகட்டிலும் ஆரவாரத்திலும் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
இந்திய கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்காகத்தான் இந்தப் பதவியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு உதவி செய்வாராக'' என்று பேசினார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் வந்து காந்தியடிகளைச் சந்தித்து, ""எல்லாமே நம் கைமீறிப் போய்விட்ட நிலையில் நாங்கள் என்ன செய்வது?'' என்று ஆலோசனை கேட்டார்கள்.
வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மறைந்த தோழர் ஜோதிபாசுவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பூபேஷ் குப்தாவும்!
""இதுபோன்ற சிக்கலான நேரங்களில் பெரிய பெரிய கூட்டங்கள், பேரணி எல்லாம் நடத்துவது இயலாது. ஆகவே நம்மால் முடிந்த அளவு சிறு சிறு கூட்டங்கள் நடத்தலாம்.
இந்துக்கள்-முஸ்லிம்கள் இணைந்து பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம். யாராக இருந்தாலும் இவ்வளவு கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நாடு, மதத்தின் பெயரால் சிதறுண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?'' என்றார் காந்தியடிகள்.
அன்றைய வங்காள கவர்னராக இருந்த ராஜாஜி வந்து காந்தியடிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக குறிப்புகள் உள்ளன. ஆனால், கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய நூலில் 16-ஆம் தேதி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வ சமயப் பிரார்த்தனையின் அற்புதம்: மாலையில் ராஷ் பெகன் மைதானத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 30,000 பேர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள்.
"இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள்', "இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக' என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, காந்தியடிகளுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் வரவேற்பு கொடுத்தார்கள்.
பிரார்த்தனைக்குப்பின் காந்தியடிகள் உரையாற்றினார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகக் கூடி பிரார்த்தனையில் கலந்து கொண்டதற்கு கல்கத்தா மக்களைப் பாராட்டினார்.
""இந்துக்கள் எந்த மாதிரியான கோஷங்களைக் கூறுகின்றார்களோ அதே கோஷங்களை முஸ்லிம்களும் கூறுகிறார்கள். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மூவர்ணக் கொடியை கையில் ஏந்திக்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களும் பறக்கவிடுகிறார்கள். கல்கத்தாவின் இந்த மனநிலை மற்ற பகுதிகளுக்கும் பரவி அங்கும் அமைதி நிலவட்டும்'' என்று நிறைவான செய்தியைக் கூறினார் காந்தியடிகள்.
லண்டனில் உள்ள அகதா ஹேரிசன் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில், ""பிரார்த்தனை மூலமாக கடவுளுக்கு நன்றி சொல்வதுதான் இன்றைய தினம் போன்ற மிகச் சிறந்த நிகழ்வை நான் கொண்டாடும் வழி'' என்று எழுதினார்.
அன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் பார்க்க உடன் இருந்தவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார் காந்தி. தான் எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. பயத்திலும் சோகத்திலும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட அவர் மனது விரும்பவில்லை.
ஆனால் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தது அவருக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இரவில் கல்கத்தா நகரின் பிற பகுதிகளுக்குச் சென்று பார்க்கிறார். மக்கள் உற்சாகத்தோடு சென்றுவருவதைப் பார்த்து அவருடைய மனது நெகிழ்ச்சியடைகிறது.
ஆதலால்தான் அடுத்த நாள் ஹரிஜன் பத்திரிக்கைக்கு அவர் எழுதிய தலையங்கத்திற்குத் தலைப்பிடும்போது ""அற்புதமா அல்லது விபத்தா?'' என்று கல்கத்தாவில் அமைதி திரும்பியதைப்பற்றி உருக்கமாக எழுதுகின்றார்.
""இந்துக்கள் மசூதிகளுக்கும் முஸ்லிம்கள் கோவில்களுக்கும் உற்சாகமாகச் சென்று வருகின்றார்கள். வெறும் நடிப்பாக இல்லாமல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இவை வெளிப்பட்டிருந்தால் கிலாபத் இயக்கக் காலங்களைவிடச் சிறந்த நிலை இது என்றுதான் சொல்லவேண்டும்'' என்று எழுதியுள்ளார்.
அமைதி வீரனாய் காந்தி: அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு, காந்தியடிகளை "தனிமனித ராணுவப்படை' என்று கூறி பிரமிப்பு அடைந்தார். 50,000 ராணுவ வீரர்களால் மேற்கு இந்தியாவில் ஏற்படுத்த முடியாத அமைதியைத் தனி மனிதராக இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தினார் காந்தி என்று புகழ்ந்து கூறினார்.
""கல்கத்தாவில் அற்புதம்'' என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் காந்தியடிகளோ, ""இந்தப் பணி இறைவனின் திருப்பணி; அவர் இட்ட பணி என் மூலமாகவும் சுரவர்த்தி போன்றோர் மூலமாகவும் இறைவன் செய்து முடிக்கின்றார்'' என்றார்.
சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் டெல்லியில் இல்லை. முதல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. செங்கோட்டையில் தேசியக்கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறந்தபோது அதைக்காண அவர் அங்கில்லை. தன்னோடு இருந்தவர்கள் சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் அமரும் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.
அதற்குக் காரணம் அதைவிட ஒரு முக்கியமான இறைப்பணி காந்திக்காகக் காத்திருந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே அமைதியை ஏற்படுத்தி இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட ரணத்தை ஆற்றும் முயற்சியில் இறங்கியிருந்தார் அவர்.
எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் காந்தியடிகள் விரும்பினார்.
ஒற்றுமையாக, அமைதியாக, அன்போடு கொண்டாட வேண்டும் என்றே எண்ணினார். நம்முடைய இந்தியச் சமுதாயம் நாகரிகமான சமுதாயம் என்பதை உலகுக்கு உணர்த்த சமூக நீதியுடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு அனைத்துத் தரப்பு மக்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுதான் காந்திக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....