முகாநூளில் தொடர

புதன்

தெய்வ புலவர் திருவள்ளுவர்


ஒன்றரையடி குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும் , கருத்துகளை மக்களுக்காக தந்தவர்.

திருவள்ளுவர் சிலை
உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக
ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் . யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின் துணைவியாரின் பெயர் வாசுகி அம்மையார்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு விமர்சனமும் செய்ததில்லை.ஏனெனில் அவர் கணவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்ததே காரணம். தனது கணவர் செய்யும் எந்த செயலும் நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தனது கணவர் உணவு உண்ணும் போது ஒரு சிறிய ஊசியினை கையில் வைத்திருப்பார். அவர் உண்ணும் போது கீழே சிந்தும் உணவு பருக்கையினை அந்த ஊசியின் மூலம் குத்தி பின்பு தண்ணீர் நிரம்பிய குவளையில் போடுவார். பின்பு தண்ணீரினை வடித்து விட்டு பின்பு அதனை தனது சாப்பாட்டுடன் கலந்துகொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் தனது கணவராகிய திருவள்ளுவரிடம், தாம் இறக்கும் தருவாயில் தான் கேட்டு தெரிந்துகொண்டார்.

திருவள்ளுவரின் இல்லத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தார். பின்பு இருவரும் பழைய சாதம் உண்டனர். அப்போது வள்ளுவர் தனது மனைவி வாசுகியிடம் "சாதம் சூடாக உள்ளது விசிறிவிடு" என்றார்.

நாமாக இருந்தால் " பழைய சாதம் எப்படி சுடும் " என்ற கேள்வியினை கேட்டிருப்போம்.

ஆனால் வாசுகி அம்மையார் அதுபோன்று எந்த கேள்வியினையும் கேட்கவில்லை கணவரின் சொல் படி விசிற ஆரம்பித்துவிட்டார். இதனால் அம்மையார் ஏதும் அறியாதவர் என்ற அர்த்தமில்லை,தனது கணவர் கூறினால் அதில் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்குமமென நம்பினார். வள்ளுவர் இதன் மூலம் நிருபித்தது என்னவெனில் வாதம் செய்யாமல் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தனது துணைவியார் பெற்றிருந்தார் என்பதே.

வாசுகி அம்மையார் ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளுவர் அவரை அழைத்தார். உடனே அம்மையார் கிணற்றுக்கயிற்றினை விட்டுவிட்டு சென்றார். ஆனால் அந்த கயிற்றுடன் கூடிய குடம் கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால் நிச்சயம் அந்த கணவன் பாக்கியசாலி தான். இப்படிப்பட்ட வள்ளுவரின் துணைவியார் வாசுகி அம்மையார் ஒருநாள் உடல்நிலை குறைவால் இறந்துபோனார்.

இந்த உலகிற்கே தனது குறள் வரியின் மூலம் பலம் சேர்த்தவர்

" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு "

என்ற குறள் மூலம் அறிவுரை வழங்கிய தெய்வப்புலவர் தனது மனைவி வாசுகியின் பிரிவினை தாங்காமல் கலங்கிவிட்டார்.

இந்த குறளின் பொருள் என்னவெனில் " நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகிற்கே பெருமை" என்பதாகும். ஆகையால் அம்மையாரின் பிரிவினை அவர் இயற்கையின் நியதியாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்மையாரின் பிரிவினை தாங்காமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ]ய்

என் தூங்கும் என்கண் இரவு"

- என்று அவரின் பிரிவை நினைத்து நாலுவரி பாட்டெழுதினார். இந்த பாட்டு வரியின் பொருள் என்னவெனில்
" அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே ! என் சொல்படி நடக்க தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே ! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படிதான் இரவில் தூங்கப் போகிறதோ! " என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.

எவ்வளவு அருமையான இல்லறத்தை வாசுகி அம்மையார் நடத்தியிருந்தால், அவ்வளவு பகுத்தறிவு சிந்தனையை தந்த வள்ளுவர் அவரின் பிரிவுக்காக வருந்தியிருப்பார்.

இன்றைய காலங்களில் தேவையில்லாத சிறு சிறு காரணங்களால் கணவன்,மனைவி இடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு,வாக்குவாதம் பெருகி திருமண முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இன்று எதனை விவாகரத்து வழக்குகள் உள்ளன நமது குடும்ப பெருமையினை நீதிமன்றங்களில் விவாகரத்து என்ற பெயரில் புதைத்து விடுகின்றோம். இது தேவையா?

"மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்" - குறள்-52

வள்ளுவர்,வாசுகி அம்மையாரின் வாழ்க்கையினை நமது மனதில் நிறுத்தி
குறைந்தபட்சமாவது ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.